அமைதியின் நறுமணம் – இரோம் ஷர்மிளா

புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி 

முடிவல்ல ஆரம்பம்

 
 
 
 
 

மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி  16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும்  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியோடு நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கும்  மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அடிப்படையில் ஒரு கவிஞர். 2014-ல்  “ரேப் நேஷன்” என்ற என் ஆவணப்படத்திற்கான நேர்காணலுக்காக அவரை சந்தித்த போது மைதி மொழியில் எழுதப்பட்டிருந்த “அமைதியின்  நறுமணம்”என்ற அவருடைய கவிதை தொகுப்பிலிருந்து, 

 

“சிறையின் கதவுகள் அகல திறக்கட்டும் 
ஒருபோதும் வேறு பாதையை 
நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை  
என்னுடைய பாதங்களை 
முள் வளையல்களாய் 
சுற்றியிருக்கும் விலங்கிலிருந்து விடுவியுங்கள் 
பறவையாய் அவதாரமெடுத்ததற்காக 
என்னை குற்றம் சுமத்தாதீர்கள்”

 

என்ற வரிகளை, வெளுத்த நாக்கும் – வெடித்த உதடுகளுமாய் வாசித்துக்காட்டியபோதே வாழ்வின் மீதான தீராத வேட்கை அவரின் கண்களில் ஒளிர்ந்தது. இவரைத்தான், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அடையாள விடுதலை செய்வதும்  பின் சில மணி நேரங்களில் “தற்கொலைக்கு முயற்சித்தார்” என்ற குற்றச்சாட்டில்  மீண்டும்  சிறை பிடிப்பதுமான  அபத்த நாடகத்தை விடாமல் நடத்தி வருகிறது. தன் உடலையே  ஆயுதமாக்கி வாய்வழி நீரையோ உணவையோ உண்ணாமல், ஆம்னெஸ்டி விவரிப்பது போல மனசாட்சியின் கைதியாய்  இவ்வளவு நெடிய காலம் அஹிம்ஸா வழி போராட்டத்தை தனி மனுசியாய் தொடர்ந்து வரும் இரோம் கேட்பதெல்லாம் தன் மண்ணிற்கான  அமைதியும் விடுதலையும் தான். வெளுத்த முகமும், ஒடிசலான தேகமும், சுருள் முடியும், தீர்க்கமான கண்களும், வலுக்கட்டாயமாக மூக்கின் வழி திரவ உணவை ஏற்றும் அரசாங்கத்தின் ஸிரிஞ்சும், நம்பிக்கையை கைவிடாத புன்னகையுமாய்  இரோம் ஷர்மிளா  சர்வதேச அளவில் எதிர்ப்பின் குறியீடாய் கொண்டாடப்படுகிறார். 
 
இம்ஃபால் நகரத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ மனையின் ஸ்பெஷல் வார்ட் அறையொன்றையே சிறைக்கூடமாக்கி ஆயுதமேந்திய காவலர்கள் சூழ இரோம் ஷர்மிளாவை அடைத்து  வைத்திருக்கிறது அரசாங்கம். வழக்கமான சடங்காக, சிறை அதிகாரிகள் அவரை மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் நீதிபதியும் எப்போதும் போல இரண்டே கேள்விகள் கேட்பதுண்டு. “உங்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறீர்களா” என்ற கேள்விக்கு “ஆம்” என்றும்  “வேறேதுவும் சொல்ல விரும்புகிறீர்களா? என்ற  கேள்விக்கு, “நண்பர்களையும் மீடியாவையம் சந்திக்க அனுமதியளியுங்கள்”  என்ற கோரிக்கையையும் தான் பதினாறு வருடங்களாக பதிலாகத் தந்திருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 26ம் தேதி, அப்படியான ஒரு நீதிமன்ற விஜயத்தின் போது, ” உயிரோடு இருக்கும்போதே தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதத்தை கைவிடப்போவதாகவும், ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து அமைப்பிற்குள்ளிருந்துக்கொண்டே  மாற்றங்களுக்காக குரல்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும், பல வருடங்களாகப் பிரிந்திருக்கும் காதலனைக் கைப்பிடித்து திருமணம் செய்ய விரும்புவதையும்  ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார். இரோமின் இந்த திடீர் முடிவுகளால் அதிர்ச்சியுற்று சலசலக்கும் சிவில் சமூகம் தான், 2000 மாவது ஆண்டில், மலோம் பேருந்து நிலையத்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படை இரண்டு குழந்தைகள் உட்பட பத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ள, ராணுவத்திற்கு இப்படி கண்ட இடத்தில் சுடுவதற்கும்,  கைது செய்வதற்கும், வல்லுறவு கொள்வதற்கும் எதேச்சதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA சட்டம் நீக்கப்படும் வரை ஓய்வதில்லை என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் அறிவித்த போதும் விமர்சித்தது. வரலாற்றின் இந்த இரண்டு தருணத்தையும் ஒரு கவிமனதின் வெடிப்பாக  பார்க்கத் தவறுபவர்களுக்கு இரோம் ஷர்மிளா ஒரு புதிராகத் தான் இருப்பார். 
 
“பார்ப்பதும், கண்காணிப்பதும் பின் அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் திரும்புவதற்கும் நான் என்ன காட்சிப் பொருளா?” என்ற அவரின் கவிதை வரியொன்று உண்டு. தனிமை தோய்ந்த பதினாறு வருடப் போராட்டத்தில் இருந்து இரோம் தன்னை விடுவித்துக்கொள்வதை தோல்வியாகப் பார்ப்பதும், திருமணம் மற்றும் தேர்தல் என்ற அவரின் தேர்வுகளை சந்தேகத்தோடு எதிர்கொள்வதும் மனஉயரமற்ற கையாலாகாத சிவில் சமூகத்தின் கோளாறுகளேயன்றி, அவரின் சரிவல்ல. தளத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்கிறேனே அன்றி போராட்டத்தை கைவிடுவதில்லை என்னும் அவரை அள்ளியணைத்து அன்பை தெரிவிப்பது தான் நமது கடமை. 
 
பெல்லட் குண்டுகளால் சல்லடையாக்குவதும், சட்ட விரோதக் கைதுகளாலும் – கொலைகளாலும் – காணாமல் அடிக்கப்படுவதாலும் – பாலியல் வல்லுறவுகளாலும் சூறையாடுவதுமாய் காஷ்மீரிலும் மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய தேசிய வல்லரசு தொடுத்திருக்கும் கொடும்போரில் இந்திய குடிமக்களாய் நம் ஒவ்வொருவரின்  பெயர்களும்  ரத்தத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரும்போது இரோம் என்ற ஆன்மாவின் சொற்களும் , பதினாறு வருடங்களாக அருந்தாமல் இனி அவர் அருந்தப்போகும் நீரின் துளிகளும் , உணவுப் பருக்கைகளும் அர்த்தம் பெறும்.
 
 
லீனா மணிமேகலை 

இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!

நன்றி – புதிய தலைமுறை 

“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன்
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் “
– கவிஞர்  இரோம் ஷர்மிளா, தன்  கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால் சென்ற மாதம்   “ரேப் நேஷன் ” (Rape Nation) என்ற என் திரைப்படத்திற்காக மணிப்பூரில்  அவரை நேர்காணல் செய்தபோது வாழ்வு குறித்த அவரது தீராத வேட்கையை தரிசித்த உணர்வு தான் கிடைத்தது. இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேட்டையாடும் இந்திய அரசாங்கத்தின்  Armed Forces Special Power Act (AFSPA) என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து பதினான்கு ஆண்டுகளாக வாய்வழி உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வரும் இந்த போராளி தேவதை பேசும்போது  ஒவ்வொரு சொல்லும்  மின்னல் துண்டுகளாக விழுகின்றன. வாஞ்சையும் புன்னகையுமாய் வரவேற்கும் அவரின் முகம், தீர்க்கமான கண்கள், சுருள் முடி, வெளுத்த மெல்லிய தேகம், நீள நீளமான நகங்கள், மூக்கில் சொருகப்பட்ட  அரசாங்கத்தின் சிரிஞ்ச் என்ற விவரணைகள் இரோமை வரையறுத்துவிட முடியாது. மறுக்க முடியாத, வலிமையான எதிர்ப்பின் பாடலாய், அஹிம்சையின் குறியீடாய்  அவரின் இருப்பு  வியாபித்திருக்கிறது.
 
மைதி மொழியில் இச்செ என்றால் சகோதரி. போலீஸ் அதிகாரிகளால் கூட அன்பும்  மரியாதையுமாக  இச்செ என்றழைக்கப்படும் இரோமை   ஒவ்வொரு மணிப்பூரியும் வாழும் சிறுதெய்வமாகத் தான் நேசிக்கிறார்கள்.  அரசு மருத்துவமனையின்  ஒரு பகுதியை பூட்டிய அறையாக மாற்றி ஆயுதமேந்திய காவலர்களை சுற்றிலும் நிறுத்தி மணிப்பூர் அரசாங்கம் இரோம் ஷர்மிளாவை  சிறை வைத்திருக்கிறது.  சிறைச்சாலை கமிஷனரிடம் ஒரு வாரத்திற்கு முன் எழுதி விண்ணப்பித்து,  விளக்கங்கள் சொல்லி, குறிப்பிட்ட வார நாட்களில், இருபது நிமிட சந்திப்பிற்கான அனுமதியை பெற்றேன் .  விதவிதமான Teddy Bear மென்பொம்மைகளும், சர்வ தேசங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்து அட்டைகளும், புத்தகங்களும் பரிசுகளும் இறைந்துக் கிடந்த அறையில், மென்மையான ஆனால் திடமான பறவைக் குஞ்சு போல அமர்ந்திருந்த    இரோமிடம்,  ஆயுதமேந்திய ஒரு காவலர் அருகிருந்து கண்காணிக்க உரையாடியது ‘இந்தியா’ என்ற அபத்த நாடகத்தின் காட்சி போல இருந்தது.  சந்தித்த அந்தக்  குறுகிய நேரத்தில், “ஒருவர் விடாமல் நான் வீர மரணம் (Matryrdom) எய்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் சாவதற்காக போராடவில்லை, நீதி நிலைத்த வாழ்விற்காக போராடுகிறேன்” என்றார். “ராணுவத்தால் மானபங்கப் படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட மனோரமா தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கும், தன் போராட்டத்திற்கு காரணமான மலோம் சம்பவம் போல வகை தொகையில்லாமல்  சுடப்பட்டு இறந்த அப்பாவி   மக்களுக்கும்,  இதற்கான  எதேச்சதிகாரத்தை  ராணுவத்திற்கு வழங்கியிருக்கும் AFSPA என்ற கொலைகார சட்டத்தை திரும்ப பெறக் கேட்டு தீக்குளித்த சித்தரஞ்சன் போன்ற போராளிகளுக்கும் நீதி கிடைக்க  வேண்டும் , அதற்கு உண்மையான ஜனநாயகம் திரும்ப வேண்டும்” என்றும் ஆங்கிலத்திலும் தன தாய்மொழி மைதியிலும் அசைக்க முடியாத உறுதியுடன் பேட்டியளித்தார். என் படங்களைக் குறித்து விவரங்கள் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கான  சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தர வேண்டுமென்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத்  தான் ஆதரவுக்  கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். நேரக்கெடு நெருங்க விடைபெறுகிறேன் என்றதும், தன் காதலர் டெஸ்மாண்டின்  புகைப்படத்தை ஒரு குழந்தை போல எடுத்துவந்து  ஆதுரத்துடன் காண்பித்தார்.அவர் வாழ்க்கையையும், போராட்டத்தையும், காதலையும்  அடிப்படையாக வைத்து தோழனும் எழுத்தாளருமாகிய ஷோபாசக்தி எழுதிய திரைக்கதையைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட போது மகிழ்ந்துப் போனார். காதல் தன் போராட்ட குணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதே தவிர  சோடை  போக வைக்கவில்லை   என்ற நம்பிக்கையை   தெரிவித்து விட்டு ஆர்வமாக என்  கண்களைப் பார்த்தார் . ஆமோதித்தவுடன் கைகளை இன்னும் இறுக்கிப்  பிடித்துக்கொண்டார். நெகிழ்வில்  உடல் சிலிர்க்க, பாதம் வியர்க்க, பூமி நழுவ, தடுமாறிப்  போனது என் நெஞ்சம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற திருக்குறளை தமிழ்க் கவிதையென எடுத்து சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி தர, பத்திரப்படுத்திக்  கொண்டார் . நானும் கவிதை எழுதும் பெண் தான் என்ற நினைவு குறுக்கிட்டது.  ஒன்றும் சொல்லாமல் மெளனமாக  வாளாவிருந்தேன். கவிதையின் மீதான சாத்தியங்களை மொழியிலிருந்து அசாதரணமான இருப்பிற்கும் எதிர்ப்பிற்கும்  கடத்தியிருந்த இரோமின் உடலுக்கும் உறுதிக்கும் முன்  வார்த்தைகள்  எனக்கு வசப்படவில்லை.  
 
 

 

 

 க்வெண்டானமா(Guantanamo)கைதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்வது போல உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் போராளிகளுக்கு பலவந்தமாக சிரிஞ்ச் மூலம் உணவளித்து கொடுமை செய்யும் இந்திய அரசாங்கம், அவரை அவ்வப்போது விடுவித்து பின் கைது செய்யும் வழக்கமான சடங்கு, சென்ற வாரமும் நடந்ததை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மணிப்பூர் நண்பர்களிடம்  தொலைபேசினேன். இமா (மைதி மொழியில் தாய்) மார்க்கெட் என்றழைக்கப்படும் பெண்களால் நடத்தப்படும் சந்தைக்கு, விடுதலை செய்யப்பட்ட  அந்த குறுகிய நேரத்தில் இரோம்  சென்றதாகவும்,  ஆயிரமாயிரம் மக்கள்  கூடி அவரை வாழ்த்தியதாகவும் தகவல்  சொன்னார்கள்.  அதைக் காண சகியாத அதிகாரம் குண்டுகட்டாக இரோம் ஷர்மிளாவை தூக்கிக்கொண்டு போய் சிறையில் அடைத்தது எனவும்  செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். இந்தியா ஒரு தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்காக வடகிழக்கு மக்களுக்கு வரலாறு முழுக்க செய்த அநீதிகளுக்கும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும்  காயாத ரணமாக மணிப்பூர் சாட்சி சொல்லி நிற்கிறது. ஒரு துளி நீர் கூட வாய்க்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஈரப் பஞ்சு வைத்து காய்ந்துப் போன தன உதடுகளை துடைத்துக் கொண்டு வாழும், போராடும்  இரோம் ஷர்மிளாவிற்கு முன் அதிகாரம் ஒரு நாள் மண்டியிடும். அப்போது இதுவரை வரலாற்றில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் அர்த்தம் பெறும்.
லீனா மணிமேகலை

அச்சமில்லை அச்சமில்லை! – புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை

நன்றி – கீதா,

நிழற்படம் : அறிவழகன்  

 
என் பயணங்களின் வழியே – தொடர் 
                     
ராஜபக்சே அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும் ஆவணப்படம் பரவலாகத்  திரையிடப்படுகிறது. போரின் போது “காணாமல் போன”வர்களின் துயரங்களை ஆதாரங்களோடு முன் வைக்கும் “வெள்ளை வான் கதைகள்”  என்ற அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்.  சானல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், NDTV போன்ற தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் கவனத்தை, ஈர்த்துள்ள லீனா மணிமேகலை, நவீன கவிதை, சினிமா என்று தீவிரமாக இயங்கி வருபவர். நான்கு கவிதை தொகுப்புகளும், தனித்துவமும், துணிச்சலும் கொண்ட பனிரெண்டு சுயாதீன திரைப்படங்களும் அவற்றையொட்டிய பயணங்களுமாய் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் இயங்கி வருபவர். கவிதைக்கும், திரைப்படங்களுக்கும் பல தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், தான் வாழும் சமூகத்தோடு கூடிய உரையாடலே தன் படைப்புகளுக்கானப் பிரதானப் பணி என்பது அவரது தரிசனம்.

இந்த வாரம் கவிஞர், இயக்குநர் லீனா மணிமேகலை தன்னுடைய பயணங்களை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம் எங்களுடையது. என் அப்பாதான் எங்கள் குடும்பத்தில், முதல் பட்டதாரி ஆனாலும் எங்களுடையது. விவசாயக் குடும்பம்தான். இப்பவும் அப்பாவின் சகோதர்கள் எல்லாம் விவசாயம்தான் செய்கிறார்கள. என் அம்மாவும் இப்போது வரை விவசாயியாகத்தான் இருக்கிறார்.என் அப்பா படித்தது முழுக்கவே சிறப்புத் தமிழ். பி.ஏ.,எம்.ஏ.,எம்.பில்., என்று படித்துப் பட்டம் பெற்றவர்.. அவரின் அடுத்த தலைமுறையாக நாங்கள் படித்தோம்.அப்பா என் அம்மாவிற்கு தாய் மாமா. அதனால் அம்மாவின் மற்ற 2 சகோதரிகள், ஒரு சகோதரர் என்று அனைவரையும் அப்பாதான் படிக்க வைத்தார். என் குடும்பத்தில் முதலில் தொழிற்கல்வி படித்த்து நான்தான். பொறியியல் பட்டதாரி. நன்றாகப் படிக்கிற நடுத்தர குடும்பத்து குழந்தைகள் ஒன்று மருத்துவம் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறியியல் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பிற்கு என் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்ஜினியரிங் படித்தேன்.
தாத்தா வெங்கடசாமி, பெரிய தாத்தா சீனிவாசன் எல்லோரும் கம்யூனிஸ்ட்  கட்சியில் இருந்தவரகள். தேசியச் செயலாளராக, மாநில செயலாளராக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே கட்சியில் பொறுப்பில் இருந்தார்கள். அதனால் எங்கள வீடு எப்போதும் கட்சி அலுவலகம் போலவே இருக்கும் ஊரில் தினமும் ஏதாவது பஞ்சாயத்து நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு என் வீட்டுப் பெரியவர்கள போகும்பொழுது என்னையும் அழைத்துப் போவாரகள். பெரும்பாலும் என்னுடைய குழந்தை பருவம் அந்தப் பொதுக்கூட்டங்களில்தான் கழிந்தது.

தாய் மாமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதால் சிறிய வயதிலேயே என் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அம்மா பதின்வயதிலேயே (teen age) குடும்ப பொறுப்பிற்குள் வந்து விட்டதால் தான் விரும்பிய எதையும் என் அம்மாவால் செய்ய முடியவில்லை. அவருக்குள் இயல்பாகவே இருந்த ‘அதை படிக்கனும், இதை தெரிஞ்சிக்னும், தேடிப் போய் பார்க்கனும் என்ற எல்லா விருப்பத்தையும் என் மூலம் செய்தார்.
நான் படித்தது முழுவதும் செங்கல்பட்டு, திருச்சி, சென்னை என்று நகரங்களில் இருந்த கான்வென்ட் பள்ளிகளில். என் அம்மாவின் விருப்பப்படி, திட்டமிட்டபடியேதான் என் குழந்தைப் பருவம் முழுவதும் இருந்தது. காலையில் எழுந்தவுடன் ப்ளேகிரவுண்டுக்கு போக வேண்டும். இயல்பாகவே அத்லெடிக், பேஸ்கட்பால் இரண்டிலும் ஆர்வம் அதிகம் என்பதால் தீவிரமாக பயிற்சி செய்தேன். அதன்பின் பள்ளி வகுப்புகள். வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை டிராமா கிளப், ஓவியக் கிளப் என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு பயிற்சி நடக்கும்.அதன்பின் பரத நாட்டியப் பயிற்சி. அம்மாவே டான்ஸ் கிளாஸ்சுக்கு அழைத்துப் போவார். எனக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதை ஒரு தவம் மாதிரி செய்தார் என் அம்மா. தொடர்ந்து 10 ஆண்டுகள் 11ம் வகுப்பு வரை பரதம் கற்று கொண்டேன். டான்ஸ் கிளாஸ் முடிந்தவுடன் பாட்டு கிளாஸ். வீட்டிற்கே டீச்சர் வந்து கர்நாடக இசை கற்றுத் தந்தார். என் குழந்தைப் பருவம் முழுவதுமே வகுப்பில் படிக்கும் பாடங்கள் தவிர டான்ஸ், மியூசிக், டிராமா, விளையாட்டு என்று மாறி மாறி ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போனதுதான் நினைவில் உள்ளது இதனாலேயே கோடை விடுமுறை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். 
ஏப்ரல், மே இரண்டு மாதமும் அம்மாவின் கிராமமான மகாராஜபுரத்திற்கு போய்விடுவோம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது அந்த கிராமம். அந்த இரண்டு மாதமும் கிராம வாழ்க்கை. மாங்காய் பறிப்பது, கிணற்றடியில் நீச்சல் அடிப்பது, கபடி விளையாடுவது என்று ஒரு வருடத்தில் இரண்டு மாதங்கள மட்டும் முழுக்க கிராமத்து சூழலில் வாழ்ந்தேன். கிராமத்து சூழலில் வளரும்பொழுது யாரும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு சில விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள். மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஏற்றத் தாழ்வுகளை கேள்வி கேட்கும் இந்த விஷயங்கள்தான் என்னுடைய முதல் ஆர்வமாக இருந்த்து.
நான் பெண்ணாக இருப்பதால் என் கேள்விகள என் வீட்டிலிருந்தே ஆரம்பித்தது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம் 15வயதிலேயே வாசிக்கக் கிடைத்தது.  ’தாய்’ நான் வாசித்த முதல் நாவல். வர்க்கம், சாதி, மதம், பாலினம் என்ற பிளவுகள் நம் சமூகத்தில் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதைப் படிக்க கிடைத்த ஜனசக்தியும், தாமரையும், செம்மலரும், சுபமங்களாவும் யோசிக்க வைத்தது.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இவர்கள் மூவரையும் நான் எங்கேயும் தேடிப் போக வேண்டியிருக்கவில்லை. என் வீட்டிலேயே இவர்களின் புத்தகங்கள் இருந்த. இவர்களைப் படிப்பதற்கும் நடைமுறையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களுக்கும் இருக்கும் தூரங்கள் திகைக்க வைத்தது என் குடும்பத்திற்குள்ளேயே இந்த வேறுபாட்டை பார்க்க முடிந்த்து. இடதுசாரி குடும்பம் என்று சொல்லுவோம், ஆனால் திருமணங்களை வெளியில் செய்ய மாட்டோம். இடதுசாரி குடும்பம் என்று பெருமையாக கூறிக் கொள்வோம். ஆனால் ஊரில் சேரிகள் இருப்பதற்காக வெட்கித் தலைகுனிய மாட்டோம்.’நான் இடதுசாரி’ என்று சொல்வதற்கும் பண்பாட்டு ரீதியாக நாம் நடந்து கொள்வதற்கும் எந்த சம்பந்தமும இருக்காது. வெளிப்படையாக சொல்வதானால் என்னுடைய விமர்சனங்கள எல்லாம் என் வீட்டிலிருந்தேதான் ஆரம்பித்தது.
 
‘நம்மிடம் ஏன் நிலம் இருக்கிறது? நம் வீட்டில் ஏன் 4 பேர் வேலை செய்கிறார்கள? ஏன் அவர்களிடம் நிலம் இல்லை? சலவைத் தொழிலாளிகள் ஏன் இன்னும் தூக்கு சட்டியில் சோறு வாங்கி செல்கிறார்கள்? நாம் மட்டும் இந்த குறிப்பிட்ட தெருவில் இருக்கிறோம். ஊரைவிட்டு தள்ளி சில தெருக்களில் வீடுகள் உள்ளன. அவர்கள் ஏன் ஊருக்குள வருவதில்லை?குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற கேள்விகளை என் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்கும்போது, ‘பாப்பா எப்படி கேள்வி மேல் கேள்வி கேட்குது பாரு? என்று பாராட்டுவார்கள். தட்டிக் கொடுப்பாரகள். உற்சாகப்படுத்துவாரகள். ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் எனக்கு கிடைத்ததில்லை. என் தேடல் அங்கு தொடங்கியது.என் தாத்தாவிடம், ”சரி தாத்தா நீங்க பெரிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். உங்க அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட் அவரும் கட்சித் தலைவர். என் அப்பா கலை இலக்கிய பெருமன்றத்தில் இருக்கிறார். என் அப்பாவின் பெரிய அண்ணன் நக்சல்பாரியாக இருந்தார். சின்ன அண்ன் மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் என் பாட்டி என்ன செய்றார்? என் அம்மா, பெரியம்மா, சித்தி என்ன பண்றாங்க? அவங்க ஏன் கட்சியில் இல்லை?என்று கேட்பேன்.நான் என் வீட்டுப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். என் வீட்டு ஆண்கள் எல்லோரும் புரட்சி என்று வெளியில் போய்விடுவார்கள். என்னுடைய எல்லாத் தலைமை குணமும், எனக்குப் பிடித்த்தை முழு ஈடுபாடுடன் செய்யும் வேகம், அதற்கான முழு அர்ப்பணிப்பு, என்று என்னிடம் இருக்கும் இந்த குணங்கள் எல்லாம் என் வீட்டுப் பெண்களிடம் இருந்து வந்தவை. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் என் வீட்டு ஆண்களிடம் இருந்து ஆரம்பித்தது.
 
நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நம்மால் தீர்வு கண்டுவிட முடியாது என்பது தெரியும். ஆனால் எந்த விஷயத்தின் மீது நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதைச் சுற்றியேதான் இயங்க முடியும். என்னுடைய கவிதைகளை படித்தால் இது தெரியும். எல்லாமே சுய கேள்விகள், விமர்சனங்கள், அரசியலில் பாலியல் பாகுபாடு, மொழி, கலாசாரத்தின் மேல் இருக்கும் நம்முடைய விமர்சனங்கள, நம் அமைப்பின் ஒடுக்குமுறை வடிவங்கள் மீதான எதிர்ப்பு, இறுகிப் போயிருக்கும் நடைமுறைகள் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்புவதற்கு மொழி எனக்கு உதவியது. ஆவணப்படங்களிலும் சரி, கவிதைகளிலும் சரி என்னை பாதிக்கும் விஷயங்களைக் சொல்கிறேன். அதற்கான உரையாடலைக் கலையின் மூலன் நிகழ்த்த முயற்சி செய்கிறேன்.
 
மாத்தம்மா, பதின்வயதுகளில் தெய்வத்திற்கு நேர்ந்துவிடப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களைப் பற்றி பேசிய என் முதல் ஆவணப்படம். ஒரு சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தை கட்டுக்குள் வைத்திருக்க கலாசாரம் எவ்வாறு நூதனமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை கேள்வியாக வைத்தேன். பல்வேறு திரைப்பட விழாக்கள் ஒருபக்கம் படத்தை திரையிட்டுக்கொண்டிருக்க, தமிழ்க் கிராமங்களின் வீதிகளில் எல்லாம் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்தப்படத்தையும், தலித் பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சித்ரவதைகளைக் குறித்த “பறை” படத்தையும், நானே நேரடியாகவே ஏறக்குறைய 200 கிராமங்களில் திரையிட்டேன். இடதுசாரி, தலித் அமைப்புகளும்,திரைப்பட இயக்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும், பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் திரையிடல்களை சாத்தியமாக்கின. சமூக இயக்கங்களுக்கு ஜனநாயகத்திற்கு அடைப்படைத் தேவையான உரையாடலை, விவாதங்களை உருவாக்குவதற்கு ஆவணப்படங்கள் எவ்வளவு வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதைக் கண் கூடாக பார்க்க முடிந்தது. எதிர்ப்புகளும் பலமாக இருந்தன.
 
நீ தலித்தா? நீ யார் இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு என்று அடையாள அரசியலை முன்வைத்து என்னை தாக்கினார்கள்., ஒரு பக்கம் போலீஸ் விசாரணைக்குப் பதிலளித்துக்கொண்டேதான் மறுபக்கம் “பறை” படத்திற்கான  படப்பிடிப்பை நடத்தினேன். சென்ஸார் தடை விதித்தது. 40 நிமிடப் படத்திற்கு 19 கட் கொடுத்தார்கள்.  தணிக்கைக்கு எதிராக இந்திய, சர்வதேச அரங்குகளில் திரைப்பட இயக்குநர்கள் தொடர்ந்து நடத்தும் போராட்ட முறைகளையும், அவற்றின் நீண்ட நெடிய வரலாறையும் தேடிப் படிக்க இந்தத் தடைகள் உதவின. இங்கு ஒரு மக்கள் சினிமா கலைஞியாக இருக்க வேண்டுமென்றால், அடிப்படையில் கருத்து சுதந்திரப் போராளியாகவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.முதல்கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் தொடங்கிய சர்ச்சை, இரண்டாவது தொகுப்பான “உலகின் அழகிய முதல் பெண்” போலீஸ் வழக்குப் பதிவு வரை சென்றது. இந்து மக்கள் கட்சி என் கவிதைப் புத்தகத்திற்கான தடைகோரல் வழக்கைத் தொடர்ந்து, தமிழக அரசின் தொலைத் தொடர்பு மற்றும் ஐடி துறை என் Blogspot தளத்தை முடக்கப் பரிந்துரைத்தது.
 
ஒவ்வொரு தடையையும் என் அடுத்தடுத்தப் படைப்பின் எரிபொருளாக மாற்றினேன். இரண்டாம் தொகுப்போடு என்னை உயிரோடு புதைத்துவிட துடித்த சக்திகள் ஏமாந்துப் போகும் வகையில், அடுத்தடுத்து இரண்டு தொகுப்புகள் வெளியிட்டேன். தமிழில் ஆவணப்படக் களம் என்பது களமே இல்லாத களம். சினிமா எடுப்பதற்கான மூலதனம் புழங்காத துறை. அப்படியும் எடுத்துவிட்டாலும், வினியோக முறைகள் தென்படாத நிலை, திரையிடலுக்கான தியேட்டர்கள் அற்ற அவலம், தொலைக்காட்சி நிறுவனங்களின் பாரபட்சம் என்று மாற்று சினிமாவுக்கு ஏதுவான சூழல் ஏதுமற்ற நிலை பத்து வருடங்களாக பெரிதாக மாறிவிட வில்லை. ஆனாலும் ஆர்வம் அறுபடாத மனம் என்னைத் தொடர்ந்து அதை நோக்கிச் செலுத்தியது.
 
ஒரு முழு நீளக் கதைப்படம் (சினிமா) எடுக்க கூடிய பயிற்சியும் வாய்ப்பும் இருந்தும் அதற்கான சூழல் அமைந்தும், செங்கடல் என்ற மக்கள் சினிமாவையே செய்தேன். தனுஷ்கோடி மீனவர்களும், மண்டபம் அகதிகளும், ராமேஸ்வர பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பாடுகளை தாங்களே நடித்தார்கள். தடை செய்யப்பட்ட எல்லைக்கடலோரப் பகுதிகளில் இருக்கும் அந்த எளிய மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளவாறு ஒரு ஆவணப்பட இயக்குநரின் ஊடாட்டத்தை இணைத்து படமாக்கினேன். சென்ஸார்போர்ட் படத்தை தடை செய்தது. பத்து மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் கிழ் இயங்கும் ட்ரைப்யூனல் எந்த வெட்டும் இல்லாமல் படத்தை விடுவித்தது.
கிட்டத்தட்ட நாற்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து, இந்தியன் பனோரமா தேர்வையும் பெற்று, இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்த செங்கடல், அரசியல் படமாததால் சந்தையால் முடக்கப்பட்டது. படத்தை பார்க்காமலேயே தமிழ்தேசிய சக்திகள் அவதூறுகளாலும், பொய்க்கதைகளாலும், கோழைத்தனமான வதந்திகளாலும் தங்கள் கீழ்த்தரமானப் பண்பாட்டு தணிக்கை முறைகளால் இன்றும் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.
 
பலரது கவனத்தை ஈர்த்த வெள்ளை வேன் கதைகள் படமும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.இலங்கையில் போரின் பெயரால் காணாமல் போனவர்கள் ஏராளம்.. தீடீர் திடீர் என்று. வெள்ளை நிற வேன்கள் வந்து சிலரை உயிரோடு கடத்திக் கொண்டு போகும். அதன் பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பி வருவார்கள் எனக் குடும்பத்தினரின் நம்பிக்கை மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பங்களைப் பற்றிய முழு நீள ஆவணப்படம் “வெள்ளை வேன் கதைகள்”.சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி  கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எந்தப் பிரிவினரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன வெள்ளை வேன் கதைகள்’.இந்தப் படத்தை உருவாக்க இப்படிக் கடத்தப்பட்ட சுமார் 500 குடும்பங்களைச் சந்தித்தேன் இதற்கு கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்த்து. இலங்கையின் வடக்குப் பகுதி ராணுவத்தின் பயங்கர கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராணுவத்திற்குத் தெரியாமல் யாரும் அந்நியர்கள் நுழைந்து விட முடியாது. பல செக் போஸ்ட்களைத் தாண்டிப் போக வேண்டும். வட இந்தியாவில் இருந்து வந்த டூரிஸ்ட்கள் போல உடையணிந்தும் பேசியும் இந்தப் பகுதிக்குள் நானும் என் குழுவினரும் நுழைந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் எங்கள் டேப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டேன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன் .இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் . முன்யோசனையாக எடுத்த விஷுவல்களை தனியாக ஒரு ஹார்ட்டிஸ்கில் பிரதி எடுத்து வைத்த்தால் அவை தப்பின. ஆனால் மின்சாரம் எப்போது வரும் எனத் தெரியாத கிராமங்களில் காமெராவின் பாட்டரிக்கு சார்ஜ் போடுவது, பிரதி எடுப்பது எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.”எப்படி உன் உயிரை, மானத்தைப் பணயம் வைத்து இந்தப்படத்தை எடுக்க முடிந்தது என்று பார்ப்பவர்கள் எல்லாரும் முன் வைக்கும் கேள்வி. தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு, இன்றும் தங்கள் தலையைக் குறிவைக்கும் ராஜபக்சே ராணுவத்தின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், தெருவுக்கு வந்துப்போராடிக் கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வீரத்திற்கு முன் நானெல்லாம் எம்மாத்திரம்?” என்கிறார் லீனா
 
ராஜபக்சே அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துக்கொண்டிருக்கும் காணாமல் போன குடும்பங்களின் போர் சாட்சியமாக ஜெனிவாவில் இந்த மாதம் “வெள்ளை வேன் கதைகள்” திரையிடப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன . ஏற்கெனவே, கடந்த நவம்பரில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக சேனல் ஃபோர் படத்தை ஒளிபரப்பியது.
 

எங்கே என் மனம் போகிறதோ, எங்கே நான் உணர்வுரீதியாக  இயக்கப்படுகிறேனோ, அதை நோக்கி என் பயணம் போகிறது. அதற்கு நான் என்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருக்கிறேன்.கசக்க கசக்க உண்மைகளைச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. முப்பதை தாண்டி என் வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த 30 வருடங்கள இல்லை அதற்கும் அதிகமாக நான் வாழும் காலம் வரை சமரசமில்லாமல் வாழவே  விரும்புகிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது. 

கருத்து சுதந்திரம் – தமிழ் பத்திரிகை சூழல் ( புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் -நிருபர் கல்யாணுடன் நடந்த உரையாடல்)

 

from kalyan kumar kalyangii@gmail.com
to Leenamanimekalai@gmail.com
date 23 March 2012 14:53
subject உங்கள் கருத்து
mailed-by gmail.com
Signed by gmail.com
Important mainly because of the people in the conversation.
 

 

hide details 23 Mar (3 days ago)

வணக்கம் லீனா,

போனில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. லண்டனில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

’இனியாவது  திருந்துமா இலங்கை’ என்ற தலைப்பில் இந்த வாரம் கவர் ஸ்டோரி
எங்களின் புதிய தலைமுறை வார இதழில் தயார் செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரு படைப்பாளியின் பார்வையில் உங்கள் கருத்து என்ன?
அந்த  நாட்டுக்கு எதிரான தீர்மானம் எந்த வகையில் பலன் அளிக்கும்?
என்ன மாற்றங்கள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.  நன்றி.
அன்புடன்
கல்யாண்
புதிய தலைமுறை
9500061604

from leena manimekalai leenamanimekalai@gmail.com
to kalyan kumar <kalyangii@gmail.com>
</kalyangii@gmail.com>
date 23 March 2012 20:58
subject Notes – Puthiya Thalaimurai
mailed-by gmail.com
 

 

hide details 23 Mar (3 days ago)
Vanakkam. Below is my note. Please mail me and get it approved, if you make any corrections. This is a political opinion on a very sensitive issue and I dont want the note to be changed without my consent. thanks. Leena Manimekalai
இனியாவது  திருந்துமா இலங்கை என்பதை எனறாவது திருந்துமா இந்தியா என்று மாற்றி கேட்க வேண்டும் நீங்கள்.
 

 

இலங்கை குறித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்காதிருந்தால் கூட அந்தப் பிரேரணை 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கும். இலங்கையின் உற்ற நண்பனும் யுத்தப் பங்காளியுமான இந்தியா ஏன் பிரேரணைக்கு ஆதரவான நிலையை எடுத்தது என நாம்  சிந்திப்பது அவசியம்.

ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முதல் நாள் (மார்ச் 7ஆம் திகதி) வைத்த தீர்மான அறிக்கை இறுதி நாள் வாக்கெடுப்பின் போது இரண்டு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்ததது. இந்த இரண்டு மாற்றங்களும் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே கொண்டுவரப்ப்பட்டுள்ளன என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மார்ச் 7 தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

இந்த 3 வது பிரிவையே இலங்கை மிக அபாயகரமானதாகக் கருதியது. இத்தீர்மானம் இலங்கை இறையாண்மையின் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலாக இலங்கை அரசு கொதித்தது. அப்போதெல்லாம் பிரேரணைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்குமென நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததும் அதைத் தொடர்ந்து தமிழக எம். பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நிகழ்ந்தன.

இலங்கையை காப்பாற்ற இந்திய அரசு எடுத்த முடிவுதான் அந்தத் திருத்தங்கள். திருத்தங்கள் செய்யப்பட்டதால் தான்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்தது. எனவே இலங்கையை அச்சுறுத்தக் கூடிய 3 வது பிரிவை “இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும்” என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது.  இதன் முலம் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திலிருந்து இலங்கை தப்பித்துக்கொண்டது.

அதுமட்டுமல்லாமல் “விசாரணைத் தொடர்பாகவும், தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றும் ” புதிய அம்சம் தீர்மானத்தில் புகுத்தப்பட்டு இலங்கை இந்தியாவால் காப்பாற்றப்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.

கூடவே, தீர்மானத்தின் மூலம் இலங்கையை அச்சுறுத்தல் செய்த அமெரிக்கா தீர்மானம் நிறைவேறிய சூட்டோடு சூடாக
இலங்கைக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக தெரிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல.

லீனா மணிமேகலை

 

2012/3/24 kalyan kumar <kalyangii@gmail.com>

Dear sir,

கவர் ஸ்டோரி குறித்த தனது கருத்தை லீனா மணிமேகலை மெயில் செய்திருக்கிறார்கள் – இது மிகவும் சென்சிடிவான மேட்டர் என்பதால் இதில் எதுவும் திருத்தங்கள் இருந்தால் அவரிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டிருக்கிறார். அதை அப்படியே தங்களுக்கு ஃபார்வேர்டு செய்திருக்கிறேன்.

கவிஞர் தாமரை இன்று மதியம் சந்திக்க வரச் சொல்லி இருக்கிறார். மாலைக்குள் அவரது கருத்தையும் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
கல்யாண்

From Maalan maalan@gmail.com
to kalyan kumar <kalyangii@gmail.com>
</kalyangii@gmail.com>
cc leenamanimekalai@gmail.com
date 24 March 2012 12:05
subject Re: Notes – Puthiya Thalaimurai
mailed-by gmail.com
Signed by gmail.com
Important mainly because of your interaction with messages in the conversation.
 

 

hide details 24 Mar (2 days ago)

கல்யாண்,
இந்தக் கருத்துக்களை எழுத்து மாறாமல் வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபணைகள் இல்லை. ஆனால் அது குறித்து நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது.

கருத்துரிமையை மதிக்கிறேன். ஆனால் பத்திரிகைக்கு எழுதுபவர்கள் ஆசிரியரின் உரிமையையும் மதிக்கக் கற்க வேண்டும். கருத்துச் சொல்கிறவர்களைப் போல ஆசிரியரும் பொறுப்பானவர்தான்

ஒரு இதழைப் பொறுத்தவரை ஆசிரியரின் முடிவே இறுதியானது. அதை ஏற்காதவரை நாம் ஏற்க வேண்டியதில்லை

எனவே இந்தக் கருத்து வெளியாகாது

லீனாவிற்கும் நகல் அனுப்பியுள்ளேன். நீங்களும் தெரிவித்து விடுங்கள்

அன்புடன்

   மாலன்

———- Forwarded message ———-
From: leena manimekalai <leenamanimekalai@gmail.com></leenamanimekalai@gmail.com>
Date: 2012/3/24
Subject: Re: Notes – Puthiya Thalaimurai
To: Maalan <maalan@gmail.com>

வணக்கம் மாலன்,கல்யாண்,

என் கருத்துகள் வெளியிடுவது, அல்லது வெளி யிடாமல் இருப்பது என்பது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒன்றை சொல்லும்போது, அதைக் கருத்து மாறாமல் வெளியிடுங்கள் என்று கேட்பது என் உரிமை என்றே கருதுகிறேன். எழுதிக் கேட்கும் பத்திரிகையாளர்கள், பல சமயங்களில் அதை மாற்றி வெளியிடும்போது, பல கசப்பான அனுபவங்களை காலம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
இதை நிபந்தனை என்று கருதுவதை விட , ஒரு படைப்பாளியும் கவனம் என்றே கருத வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
ஆனால் நீங்கள் கேட்ட விடயத்தில், நேற்று academic term break இருந்தும் நான்கு நீண்ட லெக்சருக்கு மத்தியில், நேரத்தை வளைத்து தான் மெயில் அனுப்பினேன். நேரமும் எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை தானே.
நன்றி

மணிமேகலை

</maalan@gmail.com>