போர் வந்த நாள் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன்
கவிதை : நிகோலா டேவிஸ்(Nicola Davies)
மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை
 
போர் வந்த அந்த நாளில் 
சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன
என் அப்பா 
என் இளைய சகோதரனை 
தாலாட்டுப் பாடி 
தூங்கவைத்துக் கொண்டிருந்தார்
என் அம்மா 
காலை உணவை சமைத்துவிட்டு
மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு
பள்ளி வரை வந்து விட்டுச் சென்றார்
 
அந்த நாளின் காலையில் தான் 
எரிமலைகளைப் பற்றி படித்திருந்தேன்
தலைப்பிரட்டைகள் இறுதியில் தவளைகளாக மாறுவதைக் குறித்து பாடல் ஒன்றைக் கற்றிருந்தேன்
என்  உருவ ஒவியத்திற்கு சிறகுகள் வரைந்திருந்தேன்
மதியம் சற்று ஆசுவாசமாக 
டால்பின் வடிவிலிருந்த மேகத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தான்
போர் வந்தது
ழுதலில் இடியிறங்கிப் பின் ஆலங்கட்டி மழை தெறித்தது போல இருந்தது
தீயும் புகையும் இரைச்சலுமாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
போர்
விளையாட்டுத் திடல் தாண்டி
என் ஆசிரியரின் முகத்திற்கு
வந்தது
வகுப்பின் கூரையில் விழுந்தது
நகரத்தை உடைத்து நொறுக்கியது
ஒரு கறுப்பு ஓட்டையாயப் போன  
என் வீட்டைப் பற்றி 
எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது
போர் 
எல்லாவற்றையும் கொண்டு போனது
எல்லோரையும் கொண்டு போனது
ரத்தம் கசியும் தனித்த கந்தை மூட்டையானேன் நான்
ஓடினேன் 
லாரிகளுக்குப்பின்
பேருந்துகளில் தொற்றிக்கொண்டு
வயல்களில் சாலைகளில் மலைகளில்
குளிரிலும் மழையிலும் புழுதியிலும்
பொத்தல் படகுகளில்
மூழ்கி 
தப்பி
குழந்தைகள் முகம் மணல் கவ்விக்கிடந்த கடற்கரைகளை அடையும் வரை 
ஓடினேன்
இனி ஓடவே முடியாத நிலைவரை 
எண்ணிட்ட குடிசை வரிசை 
கண்ணில் படும்வரை
ஓரு மூலையும்  
அழுக்குப் போர்வையும்
காற்றில் முனகும் கதவும் 
அகப்படும்வரை
 
போர் 
என் தோலின் அடுக்குகளில்
என் கண்களுக்குப் பின்புறம்
என் கனவுகளில்
என்னைப் பின்தொடர்ந்தது
என் இதயத்தை ஆக்கிரமித்தது
 
என்னிடம் தங்கிவிட்ட போரைத் துரத்த
நடந்தேன்
நடந்தேன்
போர் போயிராத இடத்தை தேடி
நடந்தேன்
போன பாதைகளில் 
அடைக்கப்பட்ட கதவுகளில்  
இறங்கிய சாலைகளில்
புன்னகையைத் தொலைத்து
திருப்பிக் கொண்ட முகங்களில்
போர் அப்பியிருந்தது
 
நடந்து நடந்து
ஒரு பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்தேன்
சன்னல் எட்டிப் பார்த்தபோது
அவர்கள் எரிமலைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்
பறவைகளை வரைந்துக் கொண்டும்
பாடிக்கொண்டும் இருந்தார்கள்
 
உள்ளே போனபோது
அறையில்
என் அடிச்சுவடுகள் எதிரொலித்தன
கதவைத் தள்ளி திறந்ததில்
பல முகங்கள் என்னை நோக்கி திரும்பின
ஆசிரியரின் முகம் இறுகியிருந்தது
இங்கே வேறு யாருக்கும் இடமில்லை என்றார்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை
என்றார்
என்னை வெளியேறச் சொன்னார்
 
போர் அங்கும் வந்துவிட்டது போலும்
 
குடிசைக்குத் திரும்பி
மூலைக்குத் தவழ்ந்து
போர்வைக்குள் சுருண்டுக்கொண்டேன்
போர் உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டுவிட்டதென நினைத்தேன்
கதவு அடித்தது
காற்று தானென நினைத்தேன்
ஆனால் ஒரு சிறுமியின் குரல் கேட்டது
“இது உனக்காகத் தான் கொண்டுவந்தேன் 
நீ இனி பள்ளிக்கு வரலாம்” என்றாள்
அவள் கையில் ஒரு நாற்காலி இருந்தது.
நான் இனி அதில் அமரலாம்
எரிமலைகளைப் பற்றிப் 
பாடம் படித்து
தவளைகளைப் பாடி
என் இதயத்தை அடைத்து கிடக்கும்
போரை விரட்டலாம்
 
“என்னுடைய நண்பர்களும்
நாற்காலிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்
இந்த முகாமில் இருக்கும்
எல்லாக் குழந்தைகளும்
பள்ளிக்கு வரலாம்” 
அந்த சிறுமி புன்னகையோடு சொன்னாள்
 
குடிசைகளில் இருந்து
குழந்தைகள் இறங்கிவர
நாற்காலிகள் நிரம்பிய சாலையில்
கைகோர்த்து நடந்தோம்
நாங்கள் முன்வைத்த 
ஒவ்வொரு அடிக்கும்
போர் பின்வாங்கியது  

குறிப்பு:

பெற்றோர்களை இழந்த 3000 சிரியக் குழந்தைகளை அகதிகளாக ஏற்க மறுத்த பிரிட்டனை எதிர்த்து, சிறுவர் இலக்கியத்தில் பரந்துப்பட்டு அறியப்படும் எழுத்தாளர் நிக்கோலா டேவிஸ் எழுதி இக்கவிதை வாசிக்கப்பட்ட உடன் ஓவியர் ஜேக்கி மோரீஸ் ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குழந்தைக்கு, மறுக்கப்பட்ட நாற்காலியை வரைய, டிவிட்டரில் அது #3000Chairs என்ற பேரியக்கமாக மாறி உலகமெங்கிலுமிருந்து 3000 ஓவியர்கள் நாற்காலிகளை வரைந்து அனுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். 
போர் வந்த நாள் – கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *