பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்

4.12.2009 அன்று நிருபர் தேனி கண்ணன் அவர்களும், குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனும் எடுத்த நேர்காணல்
செங்கடல் என்ற திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இயக்குநர் ஜெரால்டும், எழுத்தாளர் ஷோபா சக்தியும் திரைக்கதை வசனமெழுதுகிறார்கள். நான் நடித்து இயக்குகிறேன். பரிசோதனை முயற்சி தான். முடியட்டும். விரிவாகப் பேசுவோம்.
உங்கள் சமீபத்திய “உலகின் அழகிய முதல் பெண்” கவிதைத் தொகுப்பில், இருபால் இயல்புடையவள் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? ஓரினச்சேர்க்கையை நீங்கள் அதரிக்கிறீர்களா?
என் கவிதைகளில் உடல்களை எழுதியிருக்கிறேன். ஆணுடல், பெண்ணுடல் என்பதை எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. அடிப்படையில் உடல்கள் தனித்தனி சிறைக்கூடங்களாக இருக்கிறது. அந்த உடல்களை விடுவிக்கும் வழிமுறையாகத்தான் பாலியல் விடுதலையை எழுதுகிறேன்.

உறுதியாக ஒரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன்.

இந்தியத் தண்டனைச் சட்ட்ம் 377ஐ நீக்கி டில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலையில் பதினெட்டு வயது வந்தவர்கள் பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடத் தடையில்லை என்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சட்டம் இப்போது தான் தன் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறது.

மனிதர்கள், விலங்குகள் என்று ஜீவராசிகளெல்லாம் பிறக்கும்போது பாலியல் பன்மைத்தன்மையோடு தான் பிறக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை எல்லாமே எல்லா காலங்களிலும் இருக்கத் தான் செய்கிறது. நம்ம கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நம்ம முன்னோர்கள் எப்படி பாலியல் சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள் என்று புரிந்துக் கொள்ளலாம். நமது பெண்கள்  விலங்குகளுடன் வைத்திருக்கும் புணர்ச்சி குறித்த சிற்பங்கள், நம்ம சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கிறது.

அப்ப, நடுவில தான் கோளாறு நடந்திருக்கிறது.பெருமதங்கள் ஆணாதிக்கத்தை கொண்டுவருகின்றன, ஆணாதிக்கம் கலாசாரம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கிறது. பெண்களை காலனைஸ் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மெஷினாக மாற்றி வாரிசு, சொத்து,சாதி என்று ஜாம்ஜாமென்று வாழ்கிறது ஆணுலகம்.
“வீட்டுக்கொரு அடுப்பங்கரை, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்” என்பது ஒழிக்கப்படனும் என்கிறார் தந்தை பெரியார். கலாச்சாரத்தைக் கொட்டிக் கவிழ்க்கனும்கிற பெரியாரின் வழியே நம்ம எல்லோருடைய விடுதலைக்கான வழி.
பாரம்பர்யமான குடும்ப கட்டமைப்பு கொண்ட நாடு நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காதபோது, நீங்கள் அது பற்றி எப்படி தைரியமாகப் பேசுகிறீர்கள்?
  கணவன் இறந்தவுடன் மனைவியைத் தூக்கி நெருப்பில் போடுவது தான் நமது பாரமபர்யம். ஆனால் அதை எவ்வளவு அநீதியானது என்பதை இப்போது நாம் உண்ர்ந்திருக்கிறோம். குடும்பம் என்பது ஆணையும், பெண்ணையும் குழந்தைகளையும் “சமமாக” ஏற்று வாழ்கிற அமைப்பாக மாறுகிற வரை சீர்திருத்தங்கள் செய்து தான் ஆக வேண்டும், நானும் குடும்பத்திலிருந்து வந்தவள் தான், குடும்பத்தில் வாழ்பவள் தான். நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. நாடு என்பது பாராளுமன்றம் மட்டும் அல்ல. உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை தன் குற்றப்பிரிவிலிருந்து நீக்கியிருக்கிறது அரசிடம் அது கருத்து கேட்டிருக்கிறது. பிரதமரோ, மந்திரி சபையோ அதிகாரப்பூர்வமாக ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கருத்து  கூறவில்லை.
 அப்புறம் நியாயத்தைப் பேசுறதுல என்னங்க பயம்?ஆடு, மாடு,கோழி, சொத்து, தங்கம், பெண், வாரிசு என்ற அடிமை ஃபார்முலாவை உருவாக்கி வச்சிருக்கிற ஆணாதிக்கம், அதை வழிமொழியற சாதி, மதம் எல்லாத்தோட ஆதாரம் பாலியல் கட்டுப்பாடு தான். பெண்ணை அடிமைப்படுத்தற ஆண் தன்னைப் பேரடிமைன்னு உண்ர்ந்திட்டான்னா, கலாச்சாரம் என் கிற வார்த்தையையே அழிச்சிடலாம். ஆண்xபெண் என்ற கடுமையான முரண் அதனால உருவாகியிருக்கிற சுரண்டல் அமைப்பு,திருநங்கைகளையும் கீழ்மைப் படுத்தி வைத்திருக்கிறது.பெண்கள் திருநங்கைகளோட நெருக்கமாகனும். அங்கீகரிக்கப்படனும். அதுக்கு ஆண்மை ஒழிக்கப்பட வேண்டும்.
மனைவி, குழந்தை என்கிற குடும்ப உறவுக்கு ஓரினச்சேர்க்கை எதிராக உள்ளதே?
ஓரினச்சேர்க்கை குடும்பத்திற்கு எதிரானதல்ல. அது மனைவி, கணவன், குழந்தைகள், தெரு, கிராமம், நகரம், சட்டசபை, பாராளுமன்றம் எதற்குமே எதிரானதல்ல. நுட்பமாக யோசித்தால், அது மிகவும் இணக்கமானது, குற்றங்களை குறைப்பது. ஒருவேளை ஒரு ஆணும், ஆணும் யாருக்கும் தொந்தரவில்லாமல் தங்கள் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், பெண்ணின் மீதான  பாலியல் வன்முறகள் குறையத்தான் செய்யும். இங்கு ஆணும் பெண்ணும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் தான் உடலுறவு வைத்துக் கொள்கிறார்களா? அது உண்மையாக இருந்தால் தேவையான் குழந்தைகளைப் பெற்றுக் கொணடபின், பாலியல் உறுப்புகளை நீக்கம் செய்துவிடலாமே? குழந்தை பிறப்பு என்பது உடலுறவின் உப விளைவு அவ்வளவு தான்.
ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது இல்லையா?

ஆண் என்பதும், பெண் என்பதும், ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பதும் இயற்கையின் நியதி என நாம் நம்புவதெல்லாம் ஒருவகையான மனப் பழக்கமே.  நமது “பாரம்பர்யமான குடும்பத்தில்” ஆணுக்கான உடை, பெண்ணுக்கான உடை, வேலைமுறை, சகாயங்கள், கட்டுப்பாடுகள் இவை தான் ஒருவரை ஆணாகவோ, பெண்ணாகவோ உருவாக்குகிறது. எல்லா உடல்களும் இயற்கையின் கொடைகளே. ஒரு ஆற்றின் போக்கைத் திருப்பி அணை கட்டுவதைவிட, ஒரு மரத்தை வெட்டுவதை விட ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது அல்ல,. அது இயற்கையின் மற்றொரு தேர்வு, மாற்று நீதி.

இதைப் பற்றி பேசும்போது உங்களைச் சுற்றியுள்ள்வர்கள் தவறாகப் நினைப்பார்களே

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறீர்களா?

.ஆணும் பெண்ணுமோ, ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ தங்கள் உடல் தேவைகளை நிறைவு செய்வதற்கான தேர்வுகள் மீது தலையிடவோ, தடை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை, தனிமனிதரோ, சட்டமோ, அதை தடை செய்தால், அது மனித உரிமை மீறல், ஆதலால், நான் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன். அதை தடை செய்தால் அதையும் எதிர்ப்பேன்.

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. என்னுடைய பாலியல் ரீதியான் தேர்வு முறைகள் என்னுடைய விருப்பம் சார்ந்தது. அந்தரங்கமானது. பொது சமூகத்திற்கு அறிவிப்பது அரசியல் தேவையென்றால், என் கவிதைத்தொகுப்பில் சொன்னது போல, ஆணுடல், பெண்ணுடல் என்ற பேதம் எனக்கு இல்லை. நான் இருபால் விருப்பமுடையவள்

பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *