பரத்தையருள் ராணி

 

 
நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று 
 தீண்டலற்ற கொதிப்பில்
 உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து 
கைகளில் குருதியின் சகதி 
ஏன் என்று கேட்டான் அவன்
ஏறிட்டு
 பார்த்த என் கண்களை 
ஏற்கெனவே தெரியும் என்றான் 
உறைய மறுத்த குருதியோடு போராடியபின் 
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்
சாரையை சுரக்க வைக்க வேண்டும் என்றேன் 
வேர்களற்ற அவன் கால்களை என் கழுத்தில் சுற்றினேன் 
வேட்கையின் நொதியை 
பருகிய நொடிகளில்
வேறென்ன வேண்டும் என்றான் 

 

பெண்களை வெறுப்பவனா நீ 
         அப்படி சொல்லிவிட முடியாது  
                                                                                                                              ஆனால் யோனி மயிர்
ஏன் 
கிருமிகள் 
                                                                                                                               வெள்ளைப் பொய்கள் 
குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவை 
சரிதான் 
உனக்கு என்ன விலை வேண்டும் தருகிறேன் 
என்னை நீ பார்க்க வேண்டும் 
தொடுவது அவசியமில்லை 
கண் கொட்டாமல் 
எவ்வளவு நேரம் பார்க்கிறாயோ,அவ்வளவு விலை  
சரி


என் படுக்கையறைக்கு வந்தான் அவன் 
அம்மணம் 
அவனுக்கு காட்சி
எனக்கு செயல்
எனக்கு காட்சி
அவனுக்கு செயல்
தவளை வாசனை 
நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை 
கசியும் ரகசியங்களின் வெளுப்பு 
பொந்து 
நனவிலி  
நரகத்தின் வாசல்
வெளியேறினான் 
ஆனால் மீண்டும் வந்தான் 
பருத்த மின்னலொன்று தாக்குண்டவனாய் 
அதன் ஒளிக்கு கட்டுண்டவனாய் 
கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன் 
நீ நம்ப விருப்பப் படாதது என்றேன் 
என் உடல் நினைவகம் அல்ல
மொழியுமல்ல 
பேசுவேன்,
புரிந்துக் கொள்ள மாட்டேன் 
அர்த்தம் அதிகாரம் என்றேன்
பார்க்க முடியாததை நோக்கி திரட்டப்பட்ட 
மழுங்கிய முனையின் விறைப்பு
அவன் பார்வையை மங்கலாக்கியது 
களைப்பாயிருக்கிறது 
நாளை வருகிறேன் 
அதிக விலை தருகிறேன் 


என்னை அருகில் வந்து பார் 
தூமையில் கெட்டித்திருந்த  மயிர்
அவனின் நாக்கு ஒரு சிசுவினுடையதானது 
பாலினம் மறந்தான் 
அம்மா 
அது ஆணின் நோய் 
அப்பா என்ற சொல்லை பெருக்கிய தொற்று
நான் என்னையே பார்த்துக் கொள்ள சகியாமல் போகும்போதும் 
                    உன் பார்வையை விலக்க கூடாது 
                                                                                       என் மனதை பழக்கப் படுத்த முயற்சிக்காதே 
ஆண்டையின் தந்திரம் அது   
வெறுப்பு என்னை வசியம் செய்கிறது
                                                                                                                       வெறுப்பதை  கைவிடாதே 
மூன்றாவது இரவு
கதவை திறந்துப் போட்டிருக்கிறாய் 
யாரும் வந்துவிட்டால் என்ன செய்வாய் 
என் ரத்தம் 


கெட்டுப் போகாது 

 

உடைமையும் இழப்பும்  நடக்க இங்கென்ன போரா நடக்கிறது
ரத்த ஒழுக்கிற்கு எதுவும் தெரியாது 
விடுதலையைத் தவிர
அதன் மைக்கருப்பு உனக்கு அச்சமூட்டுகிறதா?
என்னை நீ அவமதிக்க முடியாது  
உன்னால் கருத்தரிக்க முடியாதென்பதால் துளிர்க்கும் ஒவ்வொரு புதிய உயிரும் உன் ஆளுகைக்கு உட்பட்டதல்ல அல்ல 
மறைந்தாய்  
நானும் மறைந்து போவேன்
பார்வைக்கு கட்டுப்படாமல்
பார்த்திருக்க இருக்க  மறைந்துப் போவேன்
அதுவரை காத்திருப்பேன்
பரத்தை
அவன் வாய் முணுமுணுத்ததை 
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான் 
நான் பரத்தைகளுள் ராணி
இயக்குனர் காதரின் பிரேயிலிக்கு……….. 

 

 

லீனா மணிமேகலை 

 

  

 

 

 

 

 

பரத்தையருள் ராணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *