என்னிடம் அந்தக் கவிதையில்லை

 

எப்போதும் முடிவுக்கு வராத ஒன்று
பயங்கரவாதத்திற்கு எதிரானது
மொழி பயிற்றுவிக்கப்பட்ட குண்டுகளின் திரிகளில் எல்லைகள்
எல்லைகளுக்குள் வேறு எல்லைகள்
தடுத்துநிறுத்தும் வார்த்தை எதுவும் இந்தக் கவிதையில் இல்லை
வேறு வார்த்தைகள் அதிபர்களிடமிருக்கிறது
வாசகர்கள் விற்பனை செய்யப்ப்ட்டுவிட்டார்கள்
பதுங்கு குழியில் அர்த்தங்கள்
தொலைக்காட்சி, தோட்டாக்களின் ஒரு வார்த்தையை உமிழுகிறது
அப்போது மனிதர்கள் கோப்பைகளில் நிறைகிறார்கள்
கோகோ கோலாவாக
பறவை நோய் தொற்றாக
கிரிக்கெட் மட்டையாக
தொள தொளத்த சவப்பையாக
ஒளி ஒலி காட்சியாக
போர் நடத்தப்படுகிறது நிறுத்தப்படுகிறது
கவசமிடப்பட்ட வாகனங்களிலிருந்து வரலாறு வழிநடத்தப்படுகிறது
அதற்கு தோல்வியுமில்லை அங்கு மனிதருமில்லை
அரசாங்கம் அறிவிக்கும் உறுதிமொழிபோல் கூட இந்தக் கவிதையில்லை
காப்பீட்டுத் திட்டங்கள் கடன் அட்டைகள்
குழந்தைகளின் கையில் ஆயுதங்கள்
அதைத் தடுக்க யத்தனிக்கும் வார்த்தை இறுதிக் கவிதையிலுமில்லை
அது வேறொன்றையும் கூட உணர்த்தவில்லை
டாலரோ ஈரோவோ
நாடற்ற தேசத்தில் கொத்தாய் வளரும்
எண்களிடப்படாத உலக குடில்களில் பரிமாற்ப்படும் கேப்புசினோ
நெல் வயல்களிலிருந்து பிதுங்கி வெளியேறும் புத்தம்புது மகிழ்வுந்துகள்
சொருகியதும் ஈனும் பண இயந்திரம்
இது பற்றிய குறிப்புகளுமில்லை
பொதுவாக அமெரிக்கர்கள் விதிகளுக்கு உட்பட்டது போலவே
விளையாட்டை சரியாக விளையாடத் தெரிந்திருப்பது பற்றியும்
இப்போது
வியட்னாமின் குருதி நினைவிலிருந்து உலர்ந்தது
கம்போடியா வால்மார்ட்டின் வாணிப சிற்ற்ங்காடி
இலங்கை தத்தளிக்கும் போர்ப்படகு
பர்மா, அப்படியொன்றும் இல்லை
இராக்கில் மரணம்
விளம்பர இடைவேளைக்குப்பின் ஒத்திப்போடப்பட்டுள்ள்து
சொல்வதற்கு எதுவுமில்லை செய்வதற்கும்
அமைதி
பழங்காலத்திலிருந்து பெருகிவரும் புன்னகை
பாடப்புத்தகத்திலிருந்து பேரரசர்கள் வெளியேறிவிட்டார்கள்

 -லீனா மணிமேகலை

என்னிடம் அந்தக் கவிதையில்லை

8 thoughts on “என்னிடம் அந்தக் கவிதையில்லை

 1. தலைப்பு கவர்கிறது..

  கவிதை குறித்து சொல்ல தகுதியில்லை..

  தொடருங்கள்..

  திரட்டிகளில் இணைந்தீர்களானால் அதிகமானோர் படிப்பதற்கு வசதியாகவும், உங்களுடைய கவிதைக்கான வாசகர்களின் எண்ணிக்கையும் மிகுதியாகக் கூடும்..

  வாழ்க வளமுடன்

 2. இந்த கொடுரமான உலகத்தை பார்த்தால் கண்ணில் தண்ணீருக்கு பதிலாக ரத்தமும், ரத்த நாளங்களில் கண்ணீருமாக ஓடுகிறது.. உங்கள் கவிதை என் மனதை மேலும் கணக்க வைத்து விட்டது உண்மை தோழி . உங்கள் வலை அருமை. தொடர்ந்து எழுதுங்கள். என் அன்பு. சிநேகமுடன் இன்பா.

 3. வாருங்கள், வணக்கம். உங்கள் வ்லைப்பூ அருமையாக இருக்கு. இங்கே உங்களைப் பார்ப்பதில் சந்தோசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *