ஒரு பின்னிரவில் பிறந்த பறவை 

சிறுகதை

நன்றி – கூடு இலக்கிய இதழ்

Illustration: Carmilla

 

அந்தி சாய சாய அன்று ஏனோ இருள் உந்தி தள்ளியதில் வீடு உள்வாங்கியது. பருவகால மழை தப்பிய ஜூன் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையின் மாலைப் பொழுது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.  வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள் அவ்வப்போது சுவர் ஏறி குதித்து ஹாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பழைய மனிதர்களை மனம் முற்றிலுமாக மறுத்தது. தொலைபேசியின் குரல்வளையை திருகி அணைத்தேன். அறை முழுதும் இறைந்து கிடந்த புத்தகங்கள். புகோவ்ஸ்கி ‘ உன் தனிமையை விட கொடூரமான விஷயங்கள் இந்த உலகத்தில் நிறைய உண்டு நீ ஒன்றும் பெரியதாய் அலட்டிக்கொள்ளாதே’ என்று தன் கவிதையின் பக்கங்களை அசைத்து கண் சிமிட்டினார். முகத்தை திருப்பிக் கொண்டேன். வீட்டில் இருந்து முன்னூறு மீட்டரில் கடற்கரை. அடிக்கிற காற்று  கடற்கரையில் உலா வந்த மனிதர்களை வீட்டிற்குள் அள்ளிக்கொண்டு வந்து போட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சன்னல் கதவுகளை அறைந்து சாத்தியிருந்தேன். திவான், நாற்காலி எதிலும் உட்காரப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்து சென்றவர்கள் அங்கு அமர்ந்திருந்ததின் நினைவு, பூதம் போல அவற்றை நிரப்பியிருந்தது. டிவியை இயக்கினேன். அதில் மனிதர்கள் வரவேண்டுமென்றால் நீங்கள் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஒரு கம்ப்யூட்டர் பெண் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். வெளியேறுவது என முடிவு செய்தேன்.

ஹாரிசன் பார்.  சென்னை மாநகரத்தில் ஒரு பெண்ணாக தனியாக செல்ல முடிகிற பார்கள் சிலதில் அதுவும் ஒன்று. ஆனாலும் ஒரு தடவையும் என்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை தனியாக பார்த்ததில்லை. யாராவது ஆண் துணையோடு தான் வருவார்கள். ஆனால் தனியாக பல ஆண்களை பார்த்திருக்கிறேன். கால்பந்து கிரிக்கெட் சீசன் என்றால் நிச்சயமாக பியர் பாட்டில்களை எண்ணிக்கை மறந்து குடித்துக்கொண்டு  தனக்கு பிடித்த டீமிற்காக கோல்களையும் சிக்ஸர்களையும் போட்டுக்கொண்டிருக்கும் ஆண்களை பார்த்திருக்கிறேன். இன்றும் ஒருவன் அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என்று தன் ஐஸ் கியூப்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தான். கால்பந்து பார்க்காத ஜென்மங்கள் எல்லாம் ஏன் உயிர் வாழ்கிறார்கள் என்பது போல என்னை ஒருமுறை அலட்சியமாக பார்த்தான். இன்னொரு ஓரத்தில் ஒருவர் தன்  உயிரையெல்லாம் திரட்டி எதிரில் இருப்பவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பேசுபவர் உடல்மொழியை வைத்து பணம் வைத்திருக்கும் ஒருவனை தயாரிப்பாளராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஒரு உதவி இயக்குநராகத் தான் இருக்க முடியும் என்று தோன்றியது. கொஞ்சம் தூரத்தில் இருந்த கேபினில் ஆட்கள் இருந்தார்கள். குறைந்த ஒளியில் சிரிப்பு மட்டும் சிவப்பு மஞ்சள் வயலட் ஒளியாக கசிந்தது. இன்னொரு மூலையில் ஒருவரா  இருவரா என அறிய முடியாத அளவுக்கு ஒன்றியிருந்தனர் ஒரூ ஜோடி.

என்னைப் பார்த்தவுடன் கரோனா பியரை எலுமிச்சையுடன் கொண்டு வந்து வைத்திருந்தார் பார்டெண்டர். அவ்வப்போது இங்கு தனியாளாக வந்து செல்லும் பெண்ணாக என்னைக் குறித்த அவர்களின் கற்பனைகளின் இளிப்பை பார்க்க சகிக்காதென்பதால் பார்டெண்டர்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதே இல்லை. எல்லாமே சிமிக்ஞையில் தான் நடைபெறும். மாரடோனாவிற்குப் பிறகு அர்ஜெண்டினா கால்பந்தாட்டு விளையாடுவது எனக்கு பிடிக்கவில்லை என்று கால்பந்தாட்டம் பார்த்துக்கொண்டிருந்தவனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. போட்டிருந்த ஷர்ட்டும்  டிரவுஸ்ர்ஸும் விரல் மோதிரங்களும் நிச்சயமாக அவன் ஒரு ஷேர் மார்க்கெட் பிரோக்கராகத் தான் இருக்க வேண்டும் என தோன்றியது. வீட்டில் தின்று கொழித்த மனைவி குழந்தைகள் சீரியலுக்கும் கார்ட்டூனுக்கும் அடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்க மைனர் பாருக்கு தப்பித்து வந்திருக்க வேண்டும்.

“க்ளாசிக் லைட்” குடிப்பீர்களா என்று அருகில் சென்று சிகரெட் பாக்கெட்டை நீட்டினேன். ஒருமுறை திரும்பி பார்த்து அவன் மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திகைத்தான். ஸ்மோகிங் பகுதிக்கு எழுந்து நடந்தான். லயனல் மெஸ்ஸி போடும் கோலை விட  வெளிப்படையாக பேசும் பெண் அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும். லைட்டர்கள் கை மாறின. என் பெயர் “அஷ்ரஃப் ” என்றான். நான் என் பெயரை சொல்லவும் இல்லை அவன் கேட்கவும் இல்லை. கம்பெனிகளை கொள்முதல் செய்வது விற்பது போன்ற வேலைகளை செய்வதாக ஏதோ சொன்னான்.வெந்தயக் கலர் குர்தாவும் இண்டிகோ ஜீன்சும் நான் போட்டிருந்ததை மட்டுமே அவன் குறிப்பெடுத்ததாய் தெரியவில்லை. அவனோ உடை மறைக்காத பகுதியெல்லாம் மயிர் முளைத்து டார்வின் தியரிக்குப் பிறந்தவன் போலவே இருந்தான். சிகரெட் முடிந்தது. அவரவர் சீட்டிற்கு திரும்பினோம். மேட்சை அனாதையாக விட்டுவிட்டு என்னருகில் இருக்கும் சீட்டிற்கு வந்து அமர்ந்தான். தன் கிங்ஃபிஷரை  கையோடு எடுத்து வந்திருந்தான். டிவியின் ரிமோட்டை பார்டெண்டரிடம் வாங்கி எம் டிவி மாற்றினேன். பிங்க் ஃ பிளாய்டு மிதந்தது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு என் கைகளைப்  பற்றிக்கொள்ளவா எனக் கேட்டான் . அதற்காக எவ்வளவு பொய்களை சொல்ல தயாராகிவிட்டவன் போலவும்  வாழ்க்கைக்குமான உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளை துறக்கத் துணிந்தவன் போலவும் அவன் முகபாவம் இருந்தது. பில் செட்டில் செய்தேன். “எனக்கு  கால்பந்து பிடிக்காது” என சொல்லிவிட்டு அவனைத் திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

அடுத்து 10 டவுனிங் ஸ்ட்ரீட். ஜோடி ஜோடியாக கைகளில் ஸ்டாம்ப் குத்திக்கொண்டு வாசலிலேயே அனுமதி பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்கள். நான் தனியாக கையை நீட்டினேன். புருவங்களை உயர்த்தினான் மை குத்துபவன். “உனக்கு ஒரு மார்கரிட்டா, ஓகேவா?” என்றேன். சிரித்துக்கொண்டே அனுமதித்தான். அவன் கைகள் முழுவதும் படர்ந்திருந்த புத்தர் டாட்டூ அழகாயிருந்தது. கைகளைக்  கேட்டேன். தந்தான். புத்தரின் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். கறுத்திருந்த அவன் தோல் எதிர்பார்க்காத முத்தத்தால் சற்று சிவந்து தணிந்தது.

பார் முழுவதும் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் படர்ந்திருந்தனர். ஒரு மகாசபையின்  கூட்டுப் புணர்வுக்கான ஃ போர்ப்ளே  போல மதுக்கூடம் அசைந்தது. காற்றாட உடையணிந்திருந்த யுவதிகளின் நடன அசைவுகள் ஜோடிகள் தாவின. பின் தங்கள் யுவன்களிடம் திரும்பின. எனக்கென ஒரு மூலையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கண்களில் படும் ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியாகவோ ஜோடி ஜோடியாகவோ  ஒரு கதையை கற்பனையை செய்துக்கொள்வது போதைக்கு ஏதுவாய் இருந்தது. பெரும்பாலும் சோகமான முடிவுகளைக் கொண்ட புனைவுகளையே என் மனம் விரும்பியது ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக பெற்றோரிடமோ கணவனிடமோ மனைவியிடமோ பொய் சொல்லிவிட்டு வந்தவர்கள் தான் இங்கு அதிகம் என தீர்மானமாக தோன்றியது.  அப்படியான தந்தையும் மகனும் அல்லது தாயும் மகனும்  அசந்தர்ப்பவசமாக சந்தித்துக் கொண்டதில் எழும் மனப்புகை அறையை குளிர்சாதனப் பெட்டிகளையும் மீறி புழுங்கச் செய்கிறது என நினைத்துக் கொண்டேன். கொபாக்கபோனா இசை உசுப்பேற்ற கானக உலாவிகள் போல உடல்கள் தங்கள் இரைகளின் வாசத்தை தேடிகொண்டிருந்தன. நடுவில் சென்று சற்று நடனமாடத் தொடங்கினேன். ஒரு  நெடியவன் ப்ளு பெர்ஃப்யூம் மணக்க என் தோள் பற்றி ஆடத்தொடங்கினான். அசைவில் இசைவு கூட கூட அவன் கைகள் என் இடுப்பை இறுக்கியது. சற்று இறங்கி என் புட்டத்தில் அவன் விரல்கள்  அழுத்தியதும் நிதானித்து என் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த காண்டோமை காண்பித்தேன். நழுவி ஓடினான் அவன். கத்தியை காட்டிலும் கூரானது தான் காண்டம் எனத் தோன்றியது. ஹை ஹீல்ஸில் குதிகால் சற்று வலிக்க ஓரங்கட்டினேன். அந்த இரவு கோப்பைகளில் மிச்சமிருந்த மதுபோல சிந்திக்கொண்டிருந்து. . வலம்வந்த  சீஸ் செர்ரி பைன் ஆப்பிளில் கொஞ்சம் கொறித்துக்கொண்டிருதேன். என்னைத் தேர்ந்தெடுத்தது போல் 20 வயதுகளில் இருந்த  பெண் என்னருகில் வந்தமர்ந்தாள். அடர்ந்த அவள் கூந்தல் பாதி முகத்தை மறைத்தது. ஆனாலும் அவள் கண்களில் நீர் வழிந்துக்கொண்டே இருந்தது தெரிந்தது . அவள் துடைத்துக் கொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் மூக்கிலும் வடிய தொடங்கியது. அசராமல் அழுதுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உடலில் ஒரு சிறு குலுங்கல் கூட இல்லை. நான் அமர்ந்திருந்த பார் டேபிள் அனாவசியமாக உயரமாக இருந்ததை அதிலிருந்து இறங்கி அவள் பக்கத்தில் சென்று நின்றபோது உணர்ந்தேன். என் ஸ்பரிசம் பட்டவுடன் உடல் எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது போல வெட்ட வெட்ட அழுதாள். குடிக்க தண்ணீர்  கொடுத்தேன். வாங்கி குடித்து விட்டு தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.  எதுவும் கேட்காமல் அவளை அழைத்துப் போய் பார் டேபிளுக்கு அருகில் அமர வைத்து ஒரு ட்ரிங் ஆர்டர் செய்தேன். அவள் எதுவும் வேண்டாம் என்றாள். “வேறு என்ன வேண்டும் சொல் தருகிறேன் அழாதே” என்றேன். அவளும் கிட்டத்தட்ட அந்த உயரமான பார் சேரிலிருந்து குதித்து உரசும் தூரத்தில் நின்றாள். என்னை உற்றுப்  பார்த்தவள் “என்ன வேண்டும் என்றாலும் தருவாயா” என்றாள். யெஸ் என்ற என் வார்த்தை முடிவதற்குள் என் உதட்டின் மேல் இயங்க ஆரம்பித்தாள். தயக்கத்தில்  தொடங்கி முடி கழுத்து இடுப்பு என பேரிணக்கத்தில் முடிந்தது எங்கள் உடல்கள். லேடீஸ் டாய்லெட்டின் சுவரில் சார்த்திய என் உடலில் அவள் விரல்கள் அளையாத பாகமில்லை. சிறுஅலை நடுஅலை பேரலை என எழுந்து விழுந்து புரண்டு கொண்டிருந்தது என் உடல். சுற்றி நடந்துக்கொண்டிருந்தவற்றில் இருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொண்ட உடல்கள் ஏதோ தேவ குரலுக்கு கட்டுப்பட்டதைப் போல ஒன்றையொன்று ஆகர்சித்தன. அவள் கண்ணில் நீர் வழிந்தது. அவளை அணைத்துக் கொண்டேன். போதவில்லை. என் கண்களிலும் கண்ணீர். விடைபெற்றாள். பரஸ்பரம்  எதையும் அறிந்துக்கொள்ளவில்லை நாங்கள். புள்ளிவிவரங்களிலிருந்து ஸ்பரிசத்தை விடுவித்திருந்தோம்.

தி.நகரிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு நடந்தே சென்றேன். இலகுவாயிருந்த உடலுக்கு தொலைவு தெரியவில்லை. கடந்துப்போன மனிதர்கள் வாகனங்கள் எல்லாமும் இரவொளியில் நிழல் தீபங்களாய் நீண்டு மறைந்தன. சவேரா காஃபி ஷாப்பின் நாற்காலியில் சற்று சாய்ந்தேன். பிச்சிப் பூவின் வாசம் போல அவளின் தொடுகை என்னை தொடர்ந்துக்கொண்டிருந்தது. என்னை ஒரு புள்ளியில் நிற்கவிடாமல் துரத்தியது. அவளுக்கு பிச்சி எனப் பெயர் வைத்தேன். டான்ஸ் ஃ ப்ளோருக்கு சென்றேன். இசையும் வண்ணங்களும் ஒளியும் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களைக் வண்ணம் குடித்த பூச்சிகளாக மாற்றியிருந்தன. கலைந்த பேரோவியம் போல இருந்தது அந்த காட்சி. எனக்குள் சற்றுமுன் பிச்சியால் பிறந்து பறக்க துடித்த ஒரு பறவையை விடுவித்தேன். ஆடினேன். விடிய விடிய ஆடினேன். அண்ட ஸராசரத்தையும் ஸ்பரிசிக்க ஆடினேன்.

லீனா மணிமேகலை

ஒரு பின்னிரவில் பிறந்த பறவை