இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்

"சின்ன வயசுல இருந்து நாம்  நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள்தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க மறுக்கிற ஒரு பெண் குழந்தையின் படம். அதனாலேயே இந்தப் படத்துக்கு 'புதர்ப்பறவை'ன்னு பெயர் வெச்சு இருக்கேன்" என்ற சுயாதீன திரைப்படக் கலைஞரான லீனா மணிமேகலை வெகுசன திரைப்பட இயக்குனர்கள் காட்சிப்படுத்தத் தவறிய மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு படைப்புகளின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். புதிரை வண்ணார்கள் எனச் சொல்லப்படுகின்ற சமூகத்து மக்களைப் பற்றிய அவர் எடுத்திருக்கும் முழுநீளக் கதைப்படம் விரைவில் முடிய இருக்கும் சமயத்தில் அவரைச் சந்தித்தேன்.
 இவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்கிற விசை எப்படி உருவானது?
அம்பேத்கர் தன்னுடைய ஐந்தாவது வால்யூமில் புதிரை வண்ணார்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசி ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பிறகும் அந்த மக்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்கிற வருத்தம் எனக்கு உண்டு. தவிர இந்த மக்களைப் பற்றி 'கோவேறு கழுதைகள்' நாவலிலும் வாசித்திருக்கிறேன். இணையத்தில் ஒரு கட்டுரையையும் வாசித்தேன். அது என்னை உலுக்கியது. புத்தகங்களிலும், இணையத்திலும் வாசிப்பதைத் தாண்டி அந்த மக்கள் இன்று எப்படி வாழ்கிறார்கள்? அவர்களைப் பற்றி வாசித்த தரவுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நேரடியாக தெரிஞ்சிக்கனும்னு பயணப்பட்டேன். புதிரை வண்ணார் சமூகத்திலிருக்கிற பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதனால் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பு கருதி இவங்க தொடர்ந்து இடம்பெயர்ந்துட்டு இருக்கிற சமூகம். படைப்பின் வழியாக இந்த மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கணும்னுதான் இந்தப் படத்தை எடுக்க முன்வந்தேன். இதற்காக நிறைய கிராமங்களுக்குப் பயணம் செய்து, அம்மக்களைச் சந்தித்து முப்பது மணிநேர நேர்காணல் செய்தேன். அதுதான் இந்த படத்திற்கு கச்சாப் பொருளாகவும் விளங்கியது.
உங்களுடைய படங்களை நீங்கள் பெரும்பாலும் வெகுஜன தளத்திற்கு பதிலாக  இண்டிபெண்டன்ட் மூவியாக செய்வதற்குக் காரணம்?
நான் தேர்ந்தெடுக்கிற கதைகளின் பலமே, அதோட உண்மைதான். சந்தைக்கு ஏத்த மாதிரி என்னால மாத்தி எடுக்க முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல், எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கணும்னு விரும்பித்தான் என்னுடைய எல்லாப் படங்களையும் நான் எடுக்கிறேன். பெண் கதாபாத்திரத்த நல்ல நிறமா போட சொல்லுவாங்க, வண்ணான் வேலையா அதெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னு சொல்லுவாங்க, தகப்பனா நடிக்க முடியாதுன்னு சொல்வாங்க, அவங்களுக்குத் தெரிஞ்ச நடிகர், நடிகைகளை சிபாரிசு செய்வாங்க. நான் யாரைப்பற்றி படம் எடுக்கிறேனோ அந்த மக்களைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாதவங்ககிட்ட நான் கதையை விளக்கி நடிக்க வெச்சாலும், அதுல ஜீவன் இருக்காது. அதனாலே அடித்தட்டு மக்களுக்கான அரசியலைப் புரிஞ்ச கலைஞர்களை வெச்சு படம் எடுத்துட்டு இருக்கேன். சந்தைக்கு பொருள் உற்பத்தி செய்றவங்க தான் ஏற்கனவே நிறைய இருக்காங்களே!
 திரைப்படத்திற்காக அந்த மக்களை சந்தித்த அனுபவங்கள் பற்றி?
அந்த அனுபவங்கள இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீர் முட்டும்.. அவ்ளோ இருக்கு. இந்தப் படத்துல அத்தைக்கிழவின்னு ஒரு கதாபாத்திரம் வரும். திருநெல்வேலி விக்ரமசிங்கபுரத்தில நான் சந்திச்ச பாட்டியோட கதாபாத்திரம்தான் அவங்க. அவங்க பேரு லீலாவதி. இப்பவும்  ஊர் மக்கள் கொடுக்கிற தீட்டுத் துணிகளைத் தான் துவைச்சுட்டு  அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க.  அவங்க சொன்ன ஒவ்வொரு கதையும் அவ்வளோ துயரமா இருந்துச்சு. சாதியின் பெயர்ல குலத்தொழில் என்ற பெயர்ல சுரண்டல் தான் நடக்குது. இன்னும் ஊர் மக்கள் கொடுக்கிற அரிசி பருப்புலதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா அவங்க செய்ற வேலைக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. "இந்த வேலையெல்லாம் உங்களுக்கு சிரமமா இல்லையாம்மான்னு" கேட்டேன். "என்னமா பண்றது நம்ம புள்ளைகளா இருந்தா செய்ய மாட்டோமான்னு" அவ்வளவு தாய்மையோட சொன்னாங்க. இவங்களுக்கு நடக்கிற அநீதி களையப்பட வேண்டியதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த மாதிரி பெண்கள்தான் தேவதைகள். இதுமாதிரி இச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிறைய தேவதைகளை சந்திச்சேன். ஆற்றங்கரையில அல்லது சுடுகாட்டுல இந்த இரண்டு இடங்கள்லதான் இந்த மக்கள் அதிகமா புழங்குறாங்க. ஊருக்குள்ள வர்றது இவங்களுக்கு அவ்வளவு ஒவ்வாத காரியம். காரணம் ஊர் தங்களோட தேவைக்கு மட்டுந்தான் இவங்கள உள்ள அனுமதிக்குது ஆக இவங்களும் ஊர ஒவ்வாமையாத்தான் பாக்குறாங்க. நான்கேட்ட பல அதிர்ச்சிகளை அப்படியே சினிமாவுல கொண்டு வந்திருக்கேனான்னு தெரியல. எளிமையா சொல்லணும்னா சாதியின் பெயரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைப் பெண்களின் கதையை திரைப்படமாக்கியிருக்கிறேன்.
 படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றி?
மாடத்தி என்ற மையக் கதாபாத்திரமா வரும் சிறுமி அஜ்மினா கேரளாவில் ஒரு படம் நடித்திருக்கிறார். அந்த சிறுமியின் அம்மா கதாபாத்திரத்தில் செம்மலர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சரிதாவின் இடத்தை பிடிக்கக் கூடிய திறமை செம்மலரிடம் இருக்கிறதென்பதை உறுதியாகச் சொல்வேன்.  படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் நாடக நடிகர்கள். இந்த கலைஞர்கள் யாருக்குமே தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு 'மெயின் ஸ்ட்ரீம்' சினிமாவில கிடைக்கிறதில்லை. அப்படியே கிடைச்சாலும் ஒருசில காட்சிகள்ல மட்டும் வருவாங்க. ஆனா, இந்தப் படத்துல அவங்க முழுமையா தன்னை வெளிப்படுத்தி நடிச்சு இருக்காங்க. இது தவிர படத்தில் வரும் 80 சதவீத கதாபாத்திரங்கள் எல்லாமே பாபனாசம் அணவன்குடியிருப்பு மக்கள்தான். கலை இயக்கத்திற்கு மோகன மகேந்திரன், படத்தொகுப்பிறகு தங்கராஜ் என்று என் நணபர்கள் எனக்கு பலமாக நின்றார்கள். இந்தப் படத்துக்கு இன்னொரு முக்கிய அம்சம் இதோட ஒளிப்பதிவு. படம் பார்க்கும்போது இதை உங்களால உணர முடியும். என்னோட அமெரிக்க நண்பர் ஒளிப்பதிவுக்கு எம்மி விருது வாங்கிய ஜெஃப் டோலன் ஒரு செட்யூல் ஒளிப்பதிவு செஞ்சி இருக்காரு, மீதி படம் முழுக்க அபிநந்தன் ராமானுஜன் பங்களிச்சிருக்கார். திரைக்கதையில் என்னோடு கவிஞர் யவனிகா ஶ்ரீராமும், வடகரை ரஃபீக் இஸ்மாயிலும் பணியாற்றியிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் அச்சு அசலான வட்டார மொழி வசனங்களை ரஃபீக் இஸ்மாயில் எழுதினார். லைவ் ரெக்கார்டிங் என்பதால், நடிகர்கள் வசனங்களை பல வாரங்கள் பயிற்சி எடுத்துப் பேசினார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையாக படித்து பட்டம் வாங்கி தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயா வசனங்களிலும், மற்ற தரவுகளிலும் நுணுக்கமான மாற்றங்களை செய்தார். இந்தப் படக்குழுவில் எங்களோடு ஒரு இசைக்கடவுளும் விரைவில் இணைய இருக்கிறார்.இந்தப் படத்துல வேலை செஞ்ச யாருமே பணத்த ஒரு பொருட்டா நினைக்கல. இந்தப் படமே என் நண்பர்களின் அன்பினாலும் பலத்தினாலும்தான் உருவாகுது. ஏன்னா அவங்களுக்குத் தெரியும் இது யாருக்கான படம்னு.
இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *