இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018

பத்திரிகைச் செய்தி

இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னைக் காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். அவரும் அதை ஏற்று சட்டப்பிரிவுக்கு கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளார்.

ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு.ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமுஎகச ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.

கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது.எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர்.அதையும் தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.கலாச்சாரப் போலீஸ்காரர்களாக மாறிக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் எல்லாவிதக் தாக்குதல்களுக்கும் எதிராக தமுஎகச உறுதியுடன் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எழுத்து சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கட்டற்ற நிலை அல்ல. நாம் வாழும் சூழலைக் கணக்கில் கொண்ட சுதந்திரமே சரியானது என்கிற நிலைபாட்டில் நின்றே தமுஎகச இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *