அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை

நன்றி – குங்குமம்

-நா.கதிர்வேலன்

 

-நா.கதிர்வேலன்

‘‘ஊரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில்
கசியும் உயிர்களையும் தாங்கி நின்றது தனுஷ்கோடி. அங்கே காற்றில் கூட இன்னும் உதிர நாற்றம்
அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு
கதையைச் சொன்னதுதான் ‘செங்கடல்’. இப்போ கண்டாலே குற்றம், தீட்டுன்னு சமூகத்திலிருந்து
தள்ளி வைத்திருக்கிற இன்னும் சொன்னால் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார்களிலிருந்து ஒரு
சிறுமியை அடையாளப்படுத்தி எடுக்கிற படம் தான் ‘புதர்ப்பறவை’. உண்மையின் பாய்ச்சலுடனும்
எந்த சமரசத்துக்கும் இடம் கொடாத படைப்பு…’’ ஒரு வார்த்தையென்றாலும் சுள்ளென்று தைக்கும்
வீரியத்துடன் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. மிகச் சிறந்த ஆவணப் படங்களாலும்,
ஆழமானக் கவிதைகளாலும் அறிமுகமான படைப்பாளி.

வித்தியாசமான உண்மையான களங்களை தேடிப்போகிற விதம் எவ்விதம் அமைகிறது…

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்த “ரேப் நேஷன்” என்ற என்
ஆவணப்படத்தின் ஆய்வில் இருந்தபோது, இன்டர்நெட்ல ஒரு கட்டுரை படித்தேன். நான் வாழும்
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம், சாதியின் அடிப்படையில் பெண்களுக்கு நேரிடுகிற பாலியல்
வன்முறைகளால் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்காங்க என்கிற தகவல்
அதிர்ச்சியூட்டியது. ஒரு நூறு குடும்பம் இருக்கிற ஊர் தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய ஓரிரு
புதிரை வண்ணார் குடும்பங்களை குடியமர்த்துகிறார்கள். பாலியல் வன்முறைக்கு அதிகாரத்தை
பயன்படுத்தும் போக்கும் இங்கே சர்வசாதாரணம். பார்வையால் கூடத் தீண்டத்தகாத பெண்கள்,
பாலியல் வன்முறையின் போது மட்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுவது எப்படி? பாலியல்
வன்முறை, சாதி மத தேச இன நிற பாலின அதிகாரங்களின் துஷ்பிரயோகமாக நாடெங்கும் கோர
தாண்டவம் ஆடுகிறது. காஷ்மீரில் இந்திய இறையாண்மையின் அடிப்படையில் இது நடக்கிறது.
குஜராத்தில் 2002-ல் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறை மதவெறியின் வெளிப்பாடாக நடந்தது.
பஸ்தரில் ஆதிவாசி பெண்களை காவல் துறை கஸ்டடியில் வைத்து அன்றாடம் அத்துமீறுகிறது.
தமிழகம் முழுக்க ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள். அவற்றில் அதிகமானவர்கள் இருந்த
இடங்களைப் பார்த்து, அங்கே அவர்களுடன் தங்கி, அவர்களின் துயரை நேரில் கேட்டு
உணர்ந்திருக்கிறேன். இந்த சமூகத்தில் பிறந்தது பெண் என்றால் கொன்று விடுகிறார்கள். அப்படியும்
வளர்த்தால் பெண் குழந்தை வளர்கிறது என்றே வெளி உலகத்திற்கு அறியத்தராமல் வளர்த்து 15
வயதிலேயே கட்டிக்கொடுத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தான் பிறந்த சாதி
அடையாளத்திற்கு அடிபணிய மறுத்து காடு, மலை, ஆறு என சுதந்திரம் பழகினால் எப்படியிருக்கும்
என்று கற்பனை செய்ததின் விளைவாக பிறந்தது தான் ‘புதர்ப்பறவை’. என் பதின்ம வயது நாயகி
வனத்தை தன் வீடாக மாற்றுகிறாள். நான் இதுவரை தேவதைக் கதைகளை கேட்டுத்தான்
வளர்ந்திருக்கிறேன். பெண்ணாய் பிறந்ததாலே தலை திருகி கொல்லப்படாத ஒரு புதிரை வண்ணார்
பெண் தான் என் தேவதைக் கதையின் நாயகி. அவளுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவின்
ரேகைகளில் புதர்ப்பறவை ஒளி பாய்ச்சும்.

அருமையான திரைமொழி, புரிதல் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால்
என்ன?

புரியக்கூடிய மொழியையே கையாளுகிறேன். ஆனால் அதை கொண்டு போய் சேர்ப்பதற்கான
வழிவகைகள்தான் கடினமாக இருக்கின்றன. ஏன், பெரிய நடிகரை போடவில்லை என்பார்கள்.
கமர்சியல் விஷயங்கள் இல்லையே என அங்கலாய்ப்பார்கள். அவர்களுக்காக கதையை மாற்றச்
சொல்வார்கள். நம் மக்களும் வெளுத்த தோலை எதிர்பார்க்கிறார்கள். வாய்மொழிக் கதைகள்,
நாட்டுப்புறக் கதைகள் வழி ஒரு தேவதைக் கதையை இதில் சொல்லப் பார்த்திருக்கிறேன். பெரும்
நடிகர்கள் தலையில் விலைப் பட்டியலையிக் கட்டியிருக்கிறார்கள். 200 பேர் கொண்ட யூனிட்டில்
வேலை செய்வதையே கௌரவமாக நினைக்கிறார்கள். சுயாதீன சினிமா என்றால் மட்டமாக
பார்க்கிறார்கள். இங்கே சினிமா சூதாட்டமாக இருக்கிறது. நிஜமாக நல்ல சினிமாவை
வேண்டுபவர்கள் கூடி இணைந்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து மக்களுக்கு நெருங்கிய
சினிமாவை தரனும். அதற்கான முன்னெடுப்பை சதா கொண்டு செல்வதுதான் என் வேலை. வர்த்தக
கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி நின்றால்தான் இது மாதிரியான படங்கள் சாத்தியம். நானும்
எல்லோரிடமும் இணைந்து வேலை செய்ய முடியும் என ஒரு சமயம் நம்பியிருக்கிறேன். அதற்கான
இடங்கள் இப்போது இல்லை. எப்போதும் இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள்
சொல்லும்விதத்தில் பயணப்பட்டு சமயங்களில் நான் இயல்பாக சிரிக்கும் பக்குவத்தைக்கூட
இழந்திருக்கிறேன்.

உங்கள் பயணத்திற்கு உறுதுணையான இருந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்…

அஜ்மினா என்கிற பெண் மாடத்தியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தில்
நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். செம்மலர், குமார், பாட்ரிக், ’ஆடுகளம்’ ஸ்டெல்லா, ‘மெட்ராஸ்’
புருஷோத்தமன் நடித்திருக்கிறார்கள். பாபநாசம், விக்ரமசிங்கபுரம், அணவன்குடியிருப்பு மக்கள்
துணை நடிகர்கள. செம்மலர் போன்றவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய தமிழ்
சினிமா அவரைப் போன்ற திறமையானவர்களை ஓரிரு வசனங்கள் பேசி விட்டு ஒதுக்கி வைத்தும்,
கூட்டத்தில் நிற்க வைத்தும் வேடிக்கைப் பார்க்கிறது. உள்ளூர் மக்கள் நடிக்கும் போது அவர்கள்
பேசும் மொழியிலே இவர்களும் பேசி நடிப்பது சுலபம் இல்லை. அதை என் நடிகர்கள் சுலபமாகத்
தாண்டியிருக்கிறார்கள். வசன உச்சரிப்பு, உடல் மொழி என பல வாரப் பயிற்சியும் அர்ப்பணிப்பும்
அதற்கு உதவியிருக்கின்றது. இங்கு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் பதறி
ஓடுகிறார்கள். வண்ணார்கள் கதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று பீதியடைகிறார்கள். என்றும்
போல் படத்தொகுப்பில் என் நண்பன் தங்கராஜ் இருக்கிறார். எம்மி விருது வாங்கிய அமெரிக்காவின்
ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள்.கலை
இயக்கத்தை மோகன் மகேந்திரன் கவனித்திருக்கிறார். யவனிகா ஶ்ரீராம், வடகரை ரஃபீக்
திரைக்கதை, வசனத்தில் உதவியிருக்கிறார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையில்
படித்து தாசில்தாராக பணி ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயாவின் வழிகாட்டுதலில் அச் சமூகத்தின்
அசலான வாழ்வையும் வரலாறையும் புனைகதையாக எழுதி திரைப்படமாக்கியிருக்கிறோம்.

இளையராஜா ‘புதர்ப்பறவை’யில் பணிபுரிவது…

சந்தித்தபோது ‘‘படத்தை முடித்துக் கொண்டு வா…’’ என்று புன்னகையோடு சொன்னார். ‘‘உங்கள்
தகுதிக்கு என்னால் பணம் தர முடியாது…’’ என்று சொல்லிவிட்டேன். எல்லாவற்றுக்கும் அதே
புன்னகை. பத்து நிமிஷம் வரைக்கும் போட்டுக் காட்டிய ஒரு முன்னோட்டத்தை அலாதிப்
பிரியத்தோடு பார்த்தார். அவர் தான் இதை செய்ய முடியும். என் தேடலை, உண்மைக்கான
வேட்கையை, மெளனத்தை அவரால் மட்டுமே மீட்டுத் தர முடியும். அவரைப்பற்றி வெளியில் இருந்த
எந்த பயமுத்தல்களின் சுவடையும் அவரிடம் நான் பார்க்கவில்லை. நல்லது நடக்கும். அவர் என்
சினிமாவிற்கு பண்பாட்டு அடையாளம் தர முடியும்.

ஷோபாசக்தியின் கதையில் நீங்கள் இயக்கும் சர்வதேச படமான ‘சூர்யரேகை’ எந்த நிலையில்
இருக்கு…

சூரியரேகை , எங்கள் செங்கடல் போல நேரடி அரசியல் பேசும் சினிமா அல்ல. இன்னும் ஒரு நாள்
வாழ்ந்துவிட மாட்டோமா என்ற அகதியின் தவிப்பும் தீரா ஓட்டமும் தான் சூரியரேகை. 2010 – ல்
“சன்சீ” என்ற சரக்கு கப்பலில் தாய்லாந்திலிருந்து கனடா நோக்கி புறப்பட்ட 492 ஈழத்தமிழ் அகதிகள்
என்ன ஆனார்கள் என்பதை சொல்லும் ரத்தமும் சதையுமான சினிமா. ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ 52
நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சொந்த மண்ணைப் பிரிந்து வலிகளோடு
இருக்கிறார்கள். பயணமான ஒவ்வொருவரின் ஓட்டமும் ஒரு கதை. அப்படி எத்தனை மில்லியன்
கதைகள் இருக்கின்றன. இது மனித உணர்வின் ஊர்வலம். இதில் கற்பனை இல்லை. சிங்களப்
பேரினவாதத்தால் சிதறடிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்த மறுகரைக்கும், ஓடிப்போய் அழுத கண்ணீர்
கடலாகக் கிடக்கும் இன்னொரு கரைக்கும் இடையில் நடக்கிற கதை. பெரும் பொருட்செலவு, நேரம்,
தரம் வேண்டி நிற்கிறது. இந்தியாவிலிருந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” எஸ்.ஆர். பிரபு தயாரிக்க,
பிரஞ்சு கனடிய ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பாக படம் உருவாகி வருகிறது. வரலாறு நம்மை தூர
நின்று கண் கொட்டாமல் சூரியரேகையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்.

 

அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *